காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இணையம், தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டன.
காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாள்களில் போஸ்ட்பெய்டு மொபைல் சேவைகள் மட்டும் மாநிலத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கின. இந்நிலையில், 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு நாளை காஷ்மீரை பார்வையிட உள்ளது. முன்னதாக, இந்தியா வந்திருந்த அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து காஷ்மீரின் நிலை குறித்து கேட்டறிந்தனர்.