குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில், இந்திய ஒன்றியத்திலுள்ள சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவருகின்றன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளாவில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் அடுத்தடுத்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றின.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இச்சட்டத்தை எதிர்த்து தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆளும் அரசுகளிடம் வலியுறுத்திவருகின்றன. சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இவ்விவகாரத்தில் மத்திய அரசை சரமாரியாகவிமர்சித்திருந்தார்.
இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடாளுமன்றமும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய ஐரோப்பிய இடதுசாரிகள் - நோர்டிக் கிரீன் இடதுசாரிகள் அரசியல் குழு சார்பில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.