ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி 37 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் குறித்த செய்திகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈடிவி பாரத் செய்தியாளர் உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களை காவல் துறையினர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நமது ஈடிவி பாரத்தின் காஷ்மீர் - அனந்த்நாக் செய்தியாளர் ஃபயாஸ் அஹ்மத் லோலு கூறுகையில், "செய்தியாளராக நான், முடசிர் காத்ரி (நியூஸ் 18), ஜுனைத் ரபீக் (பஞ்சாப் கேசரி) ஆகியோர் எங்கள் கடமையை செய்துகொண்டிருந்தபோது, காவல் துறையினர் எங்களைத் தாக்கினர்.
குப்கர் பிரகடனத்திற்கான உள்ளூர் மக்கள் கூட்டணி (பிஏஜிடி) வேட்பாளரின் பைட்டை எடுத்துக்கொண்டேன், அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறிக்கொண்டிருந்தார். அதிகாரப்பூர்வ பதிப்பிற்காக நான் போலீஸை தொடர்புகொண்டபோது, நாங்கள் அவர்களால் தாக்கப்பட்டோம். எங்கள் உபகரணங்களையும் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
இங்கிருக்கும் பிபில்ஸ் அலையன்ஸ் ஃபார் குப்தர் டிக்லரேஷன் (Peoples Alliance for Gupkar Declaration) கட்சியின் வேட்பாளர், காவல் துறையினர் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர். இது குறித்து காவல் துறையினரிடம் கருத்து கேட்க அவர்களிடம் சென்றபோது, அவர்கள் எங்களை கொடூரமாக தாக்கினார்கள். மேலும், அவர்கள் எங்கள் உபகரணங்களையும் பறிமுதல்செய்தனர்.
காவல் துறையினரின் இந்தக் கொடூர தாக்குதலில் ஜுனைத் ரபீக் மயக்கமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றார்.