கரோனா கொள்ளை நோயைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் கடந்த மாதம் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தச் சூழலில், ஊரடங்கை மீறி, தலைநகர் டெல்லியில் தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்புச் சார்பில், கடந்த மாதம் சர்வதேச மத மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், நாட்டில் கரோனா தொற்று அதிகரிப்பதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருந்த சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி, ' புனித ரமலான் மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் ஊரடங்கு வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள்.
நோன்பு காலத்தில் மசூதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என்பதை இம்மான்கள், உலேமா, இஸ்லாமிய அமைப்புகள் ஒருமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளன. இதுகுறித்து அவர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்ட இந்த அமைப்புக்கு அனைத்து இஸ்லாமியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு கும்பல் செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தையும் பொறுப்பாக்க முடியாது' எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம், உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ' நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் 29.8 விழுக்காடு பேர் தப்லீகி ஜமாத் நடத்திய மாநாட்டுக்குத் தொடர்புடையவர்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களைப் பாதுகாக்கவும், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு சம்பவங்களை தடுக்குமாறும் இந்தியாவை, இஸ்மியா ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தியிருந்த சூழலில், அமைச்சர் நக்வி இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இனி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் வரை அபராதம்: மத்திய அரசின் அவசர சட்டம்!