கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று பரவுவதை தடுக்கும் விதத்தில் முழுஅடைப்பு அமலில் உள்ளபட்சத்தில், கர்ப்பிணி பெண்கள், டயாலிசிஸ் நோயாளிகள் உள்ளிட்டோரின் மருத்துவ தேவைகளை பூர்த்திசெய்வது குறித்து மாநிலங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுநோய் தாக்காத வகையில் தற்காத்துக்கொள்ள தனிமைப்படுத்துதல் மற்றும் ஆயத்தப் பணிகள் மறுஆய்வு குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் காணொலி மூலமாக (வீடியோ கான்பிரன்சிங்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களான N-90 முகக் கவசங்கள், சோதனைக் கருவிகள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்களின் இருப்பு தேவை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து அவர் தெரிவிக்கையில், “இந்த முக்கியமான பொருள்களின் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது. பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் மாநிலங்கள் குறிப்பிட்டுள்ள பொருள்களின் தேவைக்கும் தீர்வு காணப்படுகிறது. நாட்டில் புதிய கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 242 ஆக உள்ளது.
இந்நேரத்தில் டயாலிசிஸ், தலசீமியா (இரத்த சிவப்பணுக்கள் குறைவு ) நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோரின் மருத்துவ தேவைகளை பூர்த்திசெய்வது குறித்து ஒவ்வொரு மாநிலங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.