தென்சீனக் கடல், கிழக்கு லடாக் ஆகிய பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்திவரும் வேளையில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் நாடுகள்), இந்தியா இடையேயான உச்சி மாநாடு காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஆசியான் நாடுகளின் தலைவர்களுடன் உரையாடினார்.
அப்போது பேசிய அவர், “அனைத்துப் பிராந்தியங்களிலும் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆசியான் நாடுகளின் தேவை இருப்பதை நாங்கள் அறிவோம். இந்திய-பசிபிக் கடல் பகுதியில் இந்தியாவின் முன்னெடுப்பிற்கும் அதன் மீதான ஆசியான் நாடுகளின் பார்வைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
ஆகவே ஆசியான் நாடுகளுடன் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், டிஜிட்டல், கடல்சார் ஒத்துழைப்பு என அனைத்திலும் நல்லுறவை வளர்த்தெடுக்க விரும்புகிறோம். அதுவே எங்களின் அதீத முக்கியத்துவம் என்று கருதுகிறோம். கடந்த சில வருடங்களாக அனைத்து விதமான ஒத்துழைப்பிலும் நாம் இணக்கமாகியுள்ளோம்” என்றார்.
உலக அரசியலில் ஆசியான் நாடுகள் செல்வாக்குமிக்க நாடுகளாகக் கருதப்படுகின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ராஜாங்க ரீதியான உறவில் இருக்கின்றன. வியட்நாம், புருனே, மியான்மர், மலேசியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகியவை ஆசியான் நாடுகளாகும்.
இதையும் படிங்க:இந்தியா-ஃபிரான்ஸ் உறவில் மேலும் ஒரு மைல்கல்; கடற்படையுடன் இணைக்கப்பட்ட வாகிர்!