காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கரோனா பேரிடர் கால மேலாண்மை, வேலை வாய்ப்பின்மை, புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துவருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்திய மக்களை காக்க எடுத்த நடவடிக்கைகள், அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை விளக்கிவருகின்றனர்.
இதற்கிடையில், நெட்டிசன்கள் பலர் அவரது பிறந்தநாளான இன்று (செப் 17) தேசிய வேலை வாய்ப்பின்மை தினமாக அனுசரிக்கப்படுவதாக குறிப்பிட்டு, #NationalUnemploymentDay என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்திவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டில் ஒரு கோடி மக்கள் அரசாங்கத்தில் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்துகிடக்கின்றனர். ஆனால் நம்மிடம் வெறும் 1.77 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் வேலை இழப்பிற்கு தள்ளப்பட்டதையடுத்து இன்றைய தினத்தை அவர்கள் தேசிய வேலை வாய்ப்பின்மை தினமாக அனுசரிக்கின்றனர். வேலைவாய்ப்பு என்பது இளைஞர்கள் தங்களது கண்ணியமாகக் கருதுகின்றனர். இதை எவ்வளவு காலத்திற்கு அரசு மறுக்கும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதாரத்தை கையாள்வதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோற்றுவிட்டதாக விமர்சித்த ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.