இந்தியாவின் புகழ்பெற்ற நுரையீரல் மருத்துவரான ஜிதேந்திர நாத் பாண்டே (79) கரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று உயிரிழந்தார்.
கோவிட்-19 பாதித்த அறிகுறிகளை உணர்ந்த மருத்துவர் பாண்டேவும், அவரது மனைவியும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
இதனையடுத்து, இருவரும் டெல்லியில் உள்ள அவர்களது வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “நாங்கள் அவரை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைத்து கவனித்து வந்தோம். அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவத்தின் காரணமாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அவரே உறுதி செய்தார். இந்த நிலையில், நேற்று இரவு இரவு உணவை உட்கொண்டு தூங்கச் சென்ற அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சீதாராம் பார்தியா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அபிஷேக் பாரதியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவும், மனிதமும் ஒன்றிணைந்த உருவமாய் வாழ்ந்துவந்த மருத்துவர் பாண்டேவின் இழப்பு மருத்துவ உலகிற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.
எய்ம்ஸ் நிறுவனத்தில் ஒரு மாணவராக நுழைந்து, அதே நிறுவனத்தில் மருத்துவத் துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
புகழ்பெற்ற நுரையீரல் மருத்துவர் ஜே.என்.பாண்டே கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தார்! 2003ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகு, சீதாராம் பார்தியா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுவாச மருத்துவத் துறையில் மூத்த ஆலோசகராக எங்களை எல்லாம் வழிநடத்தியவர். மருத்துவ உலகின் நுரையீரல் துறையில் அவரது பணியைப் பாராட்டாத நாடு இல்லை. மருத்துவர்களை வழிகாட்டி மிக கடினமான சூழலிலும் ஊக்குவித்த மருத்துவர் பாண்டே இன்று நம்மிடையே இல்லை. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :வடகிழக்கு மாநிலங்களில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை!