தேர்தல் நிதி பத்திரம்
தேர்தல் நிதி பத்திரங்கள் தற்காலிக சான்றிதழ் வடிவிலுள்ள பணம். ஒரு தனிநபர் அல்லது நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் இருந்து இதனை பெற்றுக் கொள்ளலாம். அதனை ஒரு கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கு மூலமாகவும், தேர்தல் நிதி பத்திரம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.
அண்மையில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சதவீதம் வாக்குகள் பெற்ற கட்சிகள் இதனை பெற தகுதியுடையவை. தேர்தல் நிதி பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் மற்றும் ரகசிய பாதுகாப்பை வழங்குகின்றன. அதேபோல் கட்சிகளும் தேர்தல் நிதி பத்திரம் வாயிலாக பெற்ற பணத்தின் நிகர மதிப்பை மட்டும் வெளியிட்டால் போதும்.
யாருக்கு லாபம்
இதுமட்டுமின்றி தேர்தல் நிதி பத்திரங்கள் கட்சிகளுக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்துவதில்லை. ஆதலால் பணமுதலைகள் நன்கொடை வழங்க பல பின்வாசல்களையும் திறக்கிறது. 2018ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி இந்திய அரசு, தேர்தல் நிதி பத்திரம் குறித்து அறிவித்தது. உண்மை நிலவரம் யாதெனில், தேர்தல் நிதி பத்திரம் அறிவித்த உடனே, ரூ.1,221 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் விற்பனையானது.
இதில் பாஜக ரூ.10,200 கோடியை பெற்றது. காங்கிரசுக்கு ரூ.5 கோடியும், மீதமுள்ள கட்சிக்கு ரூ.6 கோடியும் மட்டுமே கிடைத்தன. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.6,128 கோடி மதிப்பிலான ரூ.12,313 கோடி தேர்தல் நிதி பத்திரங்கள் விற்கப்பட்டன. இந்த பத்திரங்களின் வாயிலாக எந்த கட்சி அதிக பணம் ஈட்டியது என்ற தகவல் இதுவரை இல்லை. ஆனாலும் இதிலும் பாஜகவே பெருமளவு லாபம் அடைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மாநில கட்சிகள்
டாடா குழுமத்துக்கு சொந்தமான முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.6,356 கோடியும், காங்கிரசுக்கு ரூ.55.62 கோடியும் நிதி அளித்தது. பாரதி என்டர்பிரைசஸ் தேர்தல் அறக்கட்டளை மூலம் பாஜகவுக்கு ரூ.67.25 கோடியும், காங்கிரசுக்கு ரூ.39 கோடியும் நன்கொடை கிடைத்துள்ளது.
அதிகம் நன்கொடை பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசும் (ரூ.26 கோடி), எதிர்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (ரூ.25 கோடி) கட்சியும் உள்ளன.
முரண்பாடு
தேர்தல் நிதி பத்திரம் வழங்கும் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி இடையேயும் கருத்து வேறுபாடு உள்ளது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் தேர்தல் நிதி பத்திரத்தால் ஏற்படும் மூன்று சிக்கல்களை எழுப்பினார். அவைகள், “தங்கள் அடையாளத்தை மறைக்க, நிறுவனங்கள் அல்லாத போலியான நிறுவனங்களும் தேர்தல் நிதி பத்திரம் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதியாக அளிக்கலாம். இந்த போலி நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமான இடத்தை வழங்குவதன் மூலம் பணமோசடிக்கு வழிவகுக்கும். தேர்தல் நிதி பத்திரங்களுக்கு பதிலாக டீமேட் வடிவில் பத்திரங்கள் வழங்கினால் வெளிப்படையான தேர்தல் நிதிக்கு வழிவகுக்கும்.” என்பனவாகும்.