2020 மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே. சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
2020 மின்சார சட்ட திருத்த மசோதா நாட்டின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில் இந்த திருத்த மசோதா விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வாழ்வில் அக்கறை காட்டவில்லை. விவசாயிகளுக்கு பாசனத்திற்காக வழங்கப்படும் மின்சாரத்திற்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படாவிட்டால் அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வார்கள்.
அது உணவு தானியங்களின் உற்பத்தியை பாதிக்கும். இந்த மசோதா குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருக்கும் உயர் வர்க்க மக்களுக்கும், ஆலோசகர்களுக்கும் வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் நிலத்தில் யதார்த்தத்தில் வாழ்பவர்களுக்கு இது பொருந்தாது.