கரோனா வைரஸூக்கு எதிரான போரில் மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
தற்போது அந்த வரிசையில் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் இணைந்துள்ளார். போபால் நகரில் உள்ள ஜமல்பூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன், விஜய் ஐயர். 33 வயதான இவர் எலக்ட்ரீசியன் பணி மட்டுமல்லாது, பஞ்சர் கடையும் நடத்தி வருகிறார்.
ஊரடங்கால் தனது கடையை மூடிவிட்டு, வீட்டில் முடங்கியிருக்காமல், தன் உயிரைப் பணயம் வைத்து கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளான போபாலில் இலவசமாக கிருமி நாசினிகளை தெளித்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
இவரது சேவை அப்பகுதி மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மோட்டார் இருசக்கரவாகனம் வாங்க வேண்டும் என்பதற்காக சேமித்து வைத்த 70,000 ரூபாய் பணத்தில் இவர் பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசர் தெளிக்கும் கருவி, கிளவுஸ் உள்ளிட்டப் பொருட்களை வாங்கியுள்ளார்.
இந்தச் சேவை குறித்து அவர் கூறுகையில், "ஊரடங்கால் எனது தொழில் முடங்கியபோது நான் இலவசமாக கிருமி நாசினிகளைத் தெளிக்கும் சேவையில் ஈடுபட உள்ளேன் என சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தேன். அந்தப் பதிவின் மூலம் பலரும் தங்களது வீட்டில் கிருமிநாசினி தெளிக்க, எனக்கு அழைப்பு விடுத்தனர்.
எனது தந்தை, தாத்தாவைப் போல நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். ஆனால், குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு என்பதால், எனது அம்மா அதற்கு அனுமதியளிக்கவில்லை.
பாதகமான சூழ்நிலைகளில், தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்து வரும் ராணுவ வீரர்களைப் போல, நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடி, அதைத் தோற்கடிக்க வேண்டும்" என்றார் நம்பிக்கையுடன்.