புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருள்சாமி(33), எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 3) மாலை 4 மணிக்கு செல்போனில் தன்னை யாரோ அழைத்ததாகக் கூறிய அருள்சாமி, இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து இந்திராகாந்தி சிலை அருகே சென்றுள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அருள்சாமியிடம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த அடையாளம் தெரியாத நபர்கள் அருள்சாமியை கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளனர்.
உடனே அங்கிருந்து தப்பியோடிய அருள்சாமியை, அந்த கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த அருள்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உருளையன்பேட்டை காவல் துறையினர், அருள்சாமியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், பூமியான்பேட்டையைச் சேர்ந்த சிலருக்கும், அருள்சாமிக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததால், ஆத்திரமடைந்த பூமியான்பேட்டையைச் சேர்ந்தவர்கள் அருள்சாமியை கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.