முக்கிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும்போது நிதிபெறுவது வழக்கமான ஒன்று. தேர்தல் சமயத்தில் பல நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி வழங்கும். இதில், வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, தேர்தல் பத்திரம் திட்டம் 2018 குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த திட்டம் மூலம், தங்களின் விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரத்தை வாங்கி மக்கள், நிறுவனங்கள் ஆகியவை நிதி அளிக்கலாம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன் கீழ், மக்களவைத் தேர்தலில் அந்த கட்சி 1 விழுக்காடு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த பத்திரம் மூலம் பாஜகவுக்குதான் அதிக நிதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தேர்தல் நிதி பத்திரம் மூலம் பெறப்பட்ட 94.5 விழுக்காடு நிதி பாஜகவுக்கு சென்றிருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2017-18 ஆண்டில், 210 கோடி ரூபாய் நிதி பத்திரம் மூலம் பாஜகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு 5 கோடி ரூபாய் நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.