ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளைச் சேர்ந்த 1,168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பத்தேபாத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் துதாராம் பிஷ்னோய் நேற்று பொதுக்கூட்டத்தில், "உங்கள் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தால் போக்குவரத்து விதிகளை மீறுவதால் விதிக்கப்படும் கடும் அபராதம் நீக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
புதிய மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஜூலை 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் நோக்கில், அதற்குரிய அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பின.
இருப்பினும், போக்குவரத்து குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக ஒரு பாஜக வேட்பாளர் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: http://https://etvbharat.page.link/iDkNe