தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாட்டும் வறுமை: 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்துச் சென்ற மகள்

புவனேஸ்வர்: கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெண் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கில் உள்ள 1500 ரூபாயை எடுப்பதற்காக அவரை கட்டிலுடன் வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

elderly-woman-drags-cot-with-120-year-old-bedridden-mother-to-withdraw-pension-from-bank
elderly-woman-drags-cot-with-120-year-old-bedridden-mother-to-withdraw-pension-from-bank

By

Published : Jun 15, 2020, 12:30 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கத்தினைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். ஒருவேளை உணவிற்கே அரசு அளிக்கும் நிவாரணப் பொருள்களை நம்பியும், நிவாரணத் தொகையினை நம்பியும் உள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை வாட்டிய வறுமை இன்னும் தணியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்துள்ளது இந்தச் சம்பவம்.

ஒடிசா மாநிலம் நவுபாடா மாவட்டம் பராகன் கிராமத்தில் வசித்துவருபவர் குஞ்சா தேய். எழுபது வயதான இவர் கரோனா தீநுண்மி அச்சுறுத்தலாலும், ஆம்பன் புயலின் தாக்கத்தாலும் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கரோனா கால நிவாரண நிதியாக மாதம் ஒன்றிற்கு ஐநூறு ரூபாய் வீதம் செலுத்துவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து, ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள தனது தாயின் கணக்கிலிருந்து ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் அரசு செலுத்தியுள்ள 1500 ரூபாயை எடுக்கச் சென்றுள்ளார்.

ஆனால், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தான் பணத்தை அளிக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால் உடல்நிலை முடியாமல் கட்டிலில் படுத்த படுக்கையாக இருக்கும் தனது 120 வயது மதிக்கத்தக்க தாய் புஞ்சிமதி தேயை, கட்டிலுடனே வங்கிக்கு இழுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, வங்கி ஊழியர்கள் பணத்தை குஞ்சா தேயிடம் அளித்துள்ளனர். இவரது செயல் காணொலியாகப் பதிவுசெய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி எம்எல்ஏ, "வங்கிகளின் இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு இந்தச் சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்து வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இந்தக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, ஒடிசா மாநில எம்எல்ஏக்கள் சிலர் வங்கி ஊழியர்களைக் கடுமையாகச் சாடியுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலர் அனைத்து வங்கி மண்டல மேலாளர், தனியார் வங்கிகள், அரசு அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், முதியோர்கள் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தினை எடுக்க வங்கிக்கு வராமல், நேரடியாக அவர்களது வீடுகளுக்குச் சென்று ஊழியர்களே பணத்தினை அளிக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என ஆராயுமாறு கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details