தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கற்பி... ஒன்று சேர்... புரட்சி செய்...! - நூற்றாண்டைக் கடந்து நிற்கும் 'ஜெய்பீம்'

சுதந்திர இந்தியாவில் அதிகம் உடைக்கப்படும் சிலை எதுவென்றால் அது இந்த நீலநிறச் சட்டைக்காரனின் சிலைதான்! இந்தியா சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு காலம் ஆகியும், இன்றும் அம்பேத்கர் ஏன் தேவைப்படுகிறார் என்பது குறித்தான பார்வையே இது.

கற்பி....ஒன்று சேர்....புரட்சி செய்

By

Published : Apr 14, 2019, 3:10 PM IST

Updated : Apr 15, 2019, 7:51 PM IST

நிகழ்கால வரலாற்றை எழுதும் ஒரு வரலாற்று ஆசிரியர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்ன தெரியுமா?

தான் கூறிய கருத்துகளுக்காக மட்டுமின்றி கூறாதுவிட்ட கருத்துகளுக்காகவும் தாக்கப்படுவதுதான்.

அம்பேத்கரை எழுதுவதில் இருக்கும் சிக்கலும் இதுவே. அண்ணலின் எண்ணற்ற எழுத்துகள் அச்சில் ஏறியதில்லை. பதிப்பிக்கப்படாமலேயே உறங்கிக் கொண்டிருக்கின்றன.

சிலர் அம்பேத்கரை தலித்துகளுக்கான தலைவராகவும் கருதுகின்றனர். ஆனால், பொதுவான நபர்கள் அவரை தேசத்துக்கான தலைவர் என்றே கொண்டாடுகின்றனர்.

தலித்துகளுக்கான விடுதலையைத் தாண்டி அம்பேத்கர் பொதுத்தளத்தில் யார்?

1917ஆம் ஆண்டு ஒரு ரயில் பரோடா ரயில் நிலையத்தில் வந்து நிற்கிறது. 26 வயது நிரம்பிய இளைஞரான அம்பேத்கர், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பயின்றுவிட்டு திரும்பியிருந்தார். அவர் அன்று பரோடா சமஸ்தானத்தின் விருந்தினர். ஆனால் அவரை அழைத்துச் செல்ல ஒரு உதவியாளர் கூட வந்திருக்கவில்லை. தனியே நடைமேடையில் நடந்து சென்றார்.

வெளிநாட்டு வாழ்க்கை அவருக்கு புதுத் தெளிவைத் தந்திருந்தது. ஆனால் அவருக்கு முன்னால் தலையாய பிரச்னையாய் இருந்தது... அன்று இரவு தங்க இடம் தேடுவதே!

பரோடாவில் தன்னுடன் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பயின்ற நண்பர் ஒருவர் இருந்தார். ஆனால் தீண்டத்தகாத தன் நண்பனை 'இந்தியாவில்' வரவேற்க அவர் தயாராக இல்லை.

வேறு வழியின்றி ஒரு பார்சி தங்கும் விடுதியில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சேர்க்கப்படுகிறார் அம்பேத்கர். நவீன இந்தியாவின் வடிவமைப்பாளரை அன்று அப்படித்தான் வரவேற்றது தாய்நாடு.

காரணம் தீண்டப்படாத சமூகத்தில் அவர் பிறந்ததுதான்!

பள்ளிப் பாடங்களில் அசாத்திய ஆர்வத்தைக் காட்டியபோதும், கோணிப்பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் அவலம் இருந்தது. மற்ற சிறுவர்களுடன் சேரக் கூடாது, தண்ணீர் குடிக்கக் கூடாது. இப்படி மனதை அழுத்தும் பலகட்ட சோதனைகளை எதிர்கொண்டு வந்தவர்... எந்த நாட்டில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டாரோ, அந்த நாட்டின் அரசியலைமைப்புச் சட்டத்தின் 'பிதாமகனாக' மாறினார் தாதாசாகேப் டாக்டர் அம்பேத்கர்!

பரோடா மன்னருடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி பரோடா சமஸ்தானத்தின் உதவியுடன் மும்பையில் இளநிலை படிப்பும் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் படித்துவிட்டு கணக்காளராகப் பணியில் சேர்ந்தார்.

கல்வித்தகுதியில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்ற போதும் அவரை யாரும் சமமாக நடத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர்தான் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். ஆனாலும் குடிக்கத் தண்ணீர் கூட யாரும் எடுத்துக் கொடுக்க முன்வரவில்லை. காரணம் சாதியத்தின் பிடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் இந்தியச் சமூகம் கட்டுண்டு கிடந்ததுதான்.

'இந்து மதம் என்பது சாதிகளின் தொகுப்பு; சாதி உணர்வின் அடையாளம். இந்துக்களால் சமத்துவமான ஒரு சமூகத்தையோ, தேசத்தையோ கட்டி எழுப்ப முடியாததற்கான காரணமும் அதுவே'

என்று கூறிய அம்பேத்கர், மகா சங்கல்ப்... அதாவது மகா உறுதிமொழி ஒன்றை மேற்கொண்டார். அது தலித்துகள் இந்தியாவில் நடத்தப்படும் முறையை மாற்றியே ஆக வேண்டும் என்பதே.

பணியில் சந்தித்த அவமானங்கள், தங்குவதற்கான போராட்டங்கள் அவரை பரோடா சமஸ்தான வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தன. கல்வியே சாதிக்கெதிரான மிகச் சிறந்த போர்க்கருவி என்பதை அம்பேத்கர் உணர்வதற்கான தருணமும் வந்தது.

தற்போது மும்பை என்றழைக்கப்படும் அப்போதைய பம்பாய் நகரத்தில் சாதிக் கொடுமைகள் சற்று குறைவாக இருப்பதாக கேள்விப்பட்ட அம்பேத்கர் பம்பாய்க்கு இடம் பெயர்ந்தார். அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பரோடாவில் அனுபவித்த கொடுமைகளை இங்கு அவர் அனுபவிக்கவில்லை என்றாலும் சிலர், எதற்காக தாழ்த்தப்பட்டவர் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் எடுக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் மாணவர்களோ அம்பேத்கரின் திறமையால் ஈர்க்கப்பட்டிருந்தனர். அவரின் மொழித் திறனும், கல்வித்திறனும் வேறு துறை மாணவர்களைக் கூட வகுப்பறைக்கு வரவழைத்தது.

இதனால் கல்லூரி நிர்வாகத்தால் அம்பேத்கருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. மாணவர்கள் அம்பேத்கரை தீண்டத்தகாதவராகப் பார்க்கவில்லை... மாறாக அறிவு ஜீவியாக மட்டுமே பார்த்தனர். இந்த நிகழ்வின் மூலமே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க கல்வியே சிறந்த ஆயுதம் என்று உணர்ந்தார் அம்பேத்கர்.

பின்னாளில், உயர்ந்த சாதியினர் மட்டும் கல்வி கற்றால் இந்திய சாதியமைப்பு மேலும் வலுப்படுமே தவிர சமூக நல்லிணக்கம் உருவாகாது. தீண்டப்படாதவருக்கு கல்வி அளிப்பதன் வழியாக மட்டுமே சாதியம் ஒழியும் என்றும் தீர்க்கமான நம்பினார் அம்பேத்கர். இதற்காக பாடுபடும் 'பகிஷ்கிரித் ஹித்தகாரினி சபா' என்ற ஒரு இயக்கத்தையும் அவர் ஆரம்பித்தார்.

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற அம்பேத்கர் சட்டப்படிப்பையும் பயின்றார். சட்டப்படிப்பை முடித்த 1923ஆம் ஆண்டு பாரிஸ்டராக பம்பாயில் பணியைத் தொடங்கினார்.

அம்பேத்கரின் சீரிய முயற்சிகளால் 'பகிஷ்கிரித் ஹித்தகாரினி சபா' வலுப்பெற்றது. 1923 - 1927க்கு இடைப்பட்ட ஆண்டுகள் தலித் விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகவே கருதப்படுகின்றன. அதுவரை பொது இடங்களுக்கு தீண்டத்தகாதவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டுகளில் நடந்த இரு நிகழ்வுகள் மாற்றத்திற்கான விதையை விதைத்தன.

தென் இந்தியாவில் 'கறுப்புச் சட்டை வெண்தாடி கிழவர் பெரியார்' தீண்டத்தகாதோரை வைக்கம் கோயிலுக்குள் அழைத்துச் சென்ற அதே வருடம் வட இந்தியாவில் அம்பேத்கர் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க அழைத்துச் சென்றார்.

இந்த இரு நிகழ்வுகளும் தேசமெங்கும் அதிர்வலைகளை பரவச் செய்தன. இந்த நிகழ்வில் இருந்துதான் காந்தியின் எதிர்ப்பையும் சந்திக்க ஆரம்பித்தார் அம்பேத்கர். ஆனால், அவர் அதைப்பற்றி சற்றும் கவலை கொள்ளவில்லை. மாறாக, அரசியல் தளத்தில் நுழைந்த அம்பேத்கர் தீண்டத்தகாதோரின் குரலாக ஒலித்தார்.

நீண்ட காலமாக அரசியலில் தன் குரலுக்கான தளத்தைத் தேடிவந்த அம்பேத்கருக்கு பழம் நழுவி பாலில் விழுந்த தருணம் கிடைத்தது.

அந்தக் காலத்தில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேய அரசு, சைமன் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. ஆனால் முழுமையான தற்சார்பு ஆட்சி முறையை எதிர்பார்த்த காங்கிரஸ்காரர்கள், காந்தியின் அழைப்பை ஏற்று சைமன் குழுவைப் புறக்கணித்தனர்.
ஆனால் அம்பேத்கரோ, தற்போது போலவே சுதந்திர இந்தியாவில் தீண்டத்தகாதோருக்கான குரல் அரசவைகளில் எதிரொலிக்காது என்று கண்டுகொண்டு, சைமன் குழுவில் கலந்துகொண்டார். இந்தச் செயலை நாடு முழவதும் இருந்த பல விடுதலை போராட்டத் தலைவர்களும் எதிர்த்தாலும், தீண்டத்தகாதோர் கல்வி பெறுவதற்கான உரிமைக்கு இந்த சந்திப்புதான் விதையாகியது.

இதைத்தொடர்ந்து, 1930இல் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட அம்பேத்கர், காந்தியின் ஆதரவாளர்களுடன் நேரடியாக மோதினார். இந்த மாநாட்டில்தான் 'மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை முதன் முதலாக முன்வைத்தார்.

இதன்பின்னர் தலித்துகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் எந்தவிதத்திலும் தடைபடக்கூடாது என்று எண்ணிய அம்பேத்கர் தலித்களுக்குத் தனித்தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இது காந்தியுடன் நேரடி மோதலுக்கு வழிவகுத்தது.

'சுதந்திரமே நம்முன் இருக்கும் மிகப்பெரிய தேவை என்றும் சாதிய ஒடுக்குமுறைகளை பின்னர் சரிசெய்து கொள்ளலாம்' என்பது காந்தியின் எண்ணம், அம்பேத்கரோ சமூக கட்டமைப்பைச் சரிசெய்யாமல் பொருளாதாரச் சுதந்திரம் எந்த முன்னேற்றத்தையும் தராது என்ற வாதத்தில் திடமாக இருந்தார்.

அம்பேத்கருக்கும் - காங்கிரசுக்கும் இடையேயான மோதல் பூனா ஒப்பந்தத்தின்போது உச்சக்கட்டத்தை எட்டினாலும், சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் இடம்பெறவேண்டும் என்று காங்கிரஸ்காரர்களே விரும்பினர். இதற்கு காரணம் அம்பேத்கர் நம்பியதைப் போலவே அவர் பயின்றிருந்த கல்விதான்.

அம்பேத்கரை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக்கியது காங்கிரஸ் கட்சி. அமைச்சரானதும் அவருக்கு அளிக்கப்பட்ட முதல் பணி இந்திய அரசியலமைப்பை நிர்மாணிப்பதுதான்.

இதற்காகத் தமிழரான டி.டி. கிருஷ்ணமாச்சாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் அம்பேத்கர். இந்தக் குழு எந்த நாட்டிலும் அதுவரை செய்யாததைச் செய்தது. பலநாடுகளின் சட்ட அமைப்புகளிலிருந்து சட்டவரைவுகளை சான்றாதாரமாக எடுத்தது. உதாரணமாக அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து அடிப்படை உரிமை, பிரிட்டனிலிருந்து கேபினட் முறை என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சேர்த்தார்கள் டிடிகே தலைமையிலான அக்குழுவினர்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் சில மாதங்களில் எழுதி முடிக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்க இரண்டாண்டுகள் ஆயின. உலகில் எழுத்து வடிவத்தில் இருக்கும் மிக நீளமான அரசியலமைப்பு என்பது அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம்தான்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்தச் சட்டத்தை 1948 நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார் அம்பேத்கர். இதன் பிறகு 1949ஆம் ஆண்டு நவம்பர் 26இல் இந்த அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படியாக, தீண்டத்தகாதவர்களின் விடுதலைக்காக தான் எடுத்திருந்த மகா உறுதிமொழியை நிறைவேற்றினார் அவர்.

தான் சாகும்போது இந்துவாக சாகக்கூடாது என்று உறுதியேற்றிருந்த அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். ஆனால் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தன் கடைசி பிறந்த நாளன்று தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்துக்கு அவர் மாறியிருந்தார்.

சாதியம் என்னும் சமூக அமைப்பு தனி மனித சுதந்திரத்தை அபகரித்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தபோது சமூக அடுக்குகள், பாலின வேற்றுமைகள், மத வேற்றுமைகள் ஆகியவற்றைத் தாண்டி தனி மனிதரின் கண்ணியத்தைப் பேணிக் காக்க ஒற்றைப் போராளியாக போராடி அரசியலமைப்பின் மூலமாக வெற்றிகண்டார்.

இந்தியாவில் அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படையாகவும், அவசியமானதாகவும் இருப்பது சமூக விடுதலைதான் - அம்பேத்கர்

மக்களின் சமத்துவத்துக்காக பாடுபடும் அனைவருக்கும் தோழனாக இன்றும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார் 'பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்'!

Last Updated : Apr 15, 2019, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details