டெல்லி: மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி தப்பியோடிய நகைக்கடை உரிமையாளர் நீரவ் மோடியின் மும்பை, லண்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள குடியிருப்புகள் உட்பட 329.66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
தெற்கு மும்பையில் நீரவ் மோடிக்குச் சொந்தமான கடற்கரையோர பண்ணை வீடு உள்பட 4 குடியிருப்புகள், லண்டனிலுள்ள ஒரு குடியிருப்பு, வங்கி முதலீடுகள், பங்குகள் உள்ளிட்டவையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
நீரவ் மோடியின் ரூ.2,348 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முன்பு பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. 48 வயதான நீரவ் மோடியின் மீதமுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளிதான் நீரவ் மோடி. மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான இவரும், இவரது உறவினருமான மெகுல் சொக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், சுமார் ரூ.14,000 கோடி வரை கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தலைமறைவாகினர்.
நிரவ் மோடியின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி!
பிரிட்டன் காவல்துறையினரால், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.
மேலும், நீரவ் மோடியை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.