போலிக்கடவுள் நித்யானந்தா கடந்த வாரம் இந்தியாவிலிருந்து தப்பித்து நேபாளம் வழியாக ஈகுவடார் தீவுக்குச் சென்றுவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை டிரினிடாட் மற்றும் டொபாகோ அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, “கைலாசம்” என்ற பெயரில் இந்து தேசத்தை உருவாக்கி விட்டார் என்கிறது அந்தத்தகவல்.
இதனை ஈகுவடார் தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், சர்ச்சைக்குரிய போலிக்கடவுள் நித்யானந்தா எங்கள் நாட்டில் இல்லை. அவர் கரிபியன் தீவான ஹெய்திக்கு தப்பித்து சென்றிருக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், நித்யானந்தாவுக்கு நாங்கள் அடைக்கலம் அளிக்கவில்லை. தென் அமெரிக்காவிலுள்ள எந்தவொரு தீவையோ அல்லது நிலத்தையோ வாங்க எங்கள் நாடு எந்த உதவியும் செய்யவில்லை” எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நித்யானந்தா உருவாக்கியதாக கருதப்படும் கைலாசம் தீவு சம்மந்தப்பட்ட இணைய பக்கத்தில், கைலாசம் எந்த எல்லைக்குள்ளும் அடங்காத நாடு. கோயில் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, நெற்றிக்கண் (மூன்றாவது கண்) பின்னால் இருக்கும் அறிவியல் இரகசியம், யோகா, தியானம், உலக தரத்திலான மருத்துவம், இலவச உணவு என கிடைக்கும் நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தனித்துவமான சுதந்திர நாட்டுக்கு வாருங்கள் என்று நித்யானந்தா அவரின் சிஷ்ய கோடிகளுக்கு அழைப்பு விடுக்கிறார். கூடவே நாட்டை வழிநடத்தவேண்டும் நன்கொடையும் தாராளமாகத் தாருங்கள் எனக்கேட்கிறார். கடந்த காலங்களில் ஓஷோ ரஜ்னீஷைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் போன்று நித்யானந்தாவைச் சுற்றிலும் காணப்படுகிறது.