கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் மத்திய அரசை குற்றம்சாட்டிவரும் நிலையில், பொருளாதாரத்தை தவறாக கையாண்டதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன, இதனை இனியும் அமைதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் செய்திகளில் வெளியான மக்களின் வருமானம் குறித்த விவரங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 10 இல் எட்டு குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளன, நகர்புறத்தைக் காட்டிலும் கிராமப்புறத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது, பத்தாண்டுகளில் முதல் முறையாக கடும் வறுமை ஏற்படவுள்ளது என மூன்று முக்கிய தரவுகளை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE), சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் ஒன்றிணைந்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அதன் தரவுகளைதான் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.