காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும் அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் அமைச்சர் அல்லது முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குள் மேலவை அல்லது கீழவை என ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும்.
ஆனால் தற்போது கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித தேர்தலும் நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் மகாராஷ்டிரா மேலவையில் இரண்டு உறுப்பினர் பதவிகளை அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நியமிக்கலாம். இப்போது காலியாக இருக்கும் இந்த மேலவை உறுப்பினர் பதவிக்கு உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரவை இரண்டாவது முறையாக அம்மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது.