திருச்சூர்: தேநீர் அருந்திய பிறகு அந்த பிஸ்கட் கப்பை சாப்பிடலாம். இந்த பிஸ்கட் கப் கேரளா மாநிலம் திரிச்சூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் விற்கப்படும் 'பிஸ்கட் டீ' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எதிலும் புதுமை புகுத்துவது கேரள மக்களின் அடையாளமாக இருந்துவருகிறது. அந்த வகையில், தேநீர் விற்பனையிலும் புதுமை புகுத்தியுள்ளனர். இந்தச் சிறப்பு தேநீர் பற்றிய செய்திகளும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. திருச்சூர் நகரத்தின் ஸ்வராஜ் ரவுண்டானா அருகிலுள்ள ஏ.ஆர். மேனன் சாலையில் இருக்கிறது ராதாகிருஷ்ணா பேக்கரி.
இந்த பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தை தரும். டீயை உறிஞ்சி வடையை கடித்து பழக்கப்பட்டவர்கள், பிஸ்கட் கப் டீயை கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த கரோனா காலத்திலும் ராதாகிருஷ்ணா பேக்கரியில் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கிறது.
ராதாகிருஷ்ணா பேக்கரியில் தேநீர், ‘பிஸ்கட்’ டீ கப்பில் வழங்கப்படுகிறது, இது வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்திய பிறகு சாப்பிடலாம். ஒரு பிஸ்கட் கப் டீ 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பிஸ்கட் கப் டீ பார்க்க சூடான தேநீரால் உருகிவிடுவதுபோல் காட்சியளித்தாலும், சுமார் 20 நிமிடங்கள் வரை கசியாமல் தாக்குப் பிடிக்கிறது.