டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, கோவிந்த் பூரி காவல் நிலையத்தில் ஆன்லைன் பணம் மோசடி தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நான் ஆன்லைனில் மொபைல் வாங்குவது தொடர்பாக தேடிக்கொண்டிருந்தேன். அப்போது,www.mobilityworld.in என்ற இணையதளத்தில் மிகவும் மலிவான விலையில் இஎம்ஐயில் செல்போன்கள் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
நான் அந்த இணையதளத்தை தொடர்பு கொண்ட போது, முதலில் 'paymobile@upi' என்ற விபிஏவுக்கு வெறும் 1,499 மட்டும் செலுத்துங்கள் செல்போன் உடனடியாக டெலிவர் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.
நானும் அதை நம்பி உடனடியாக பணத்தை செலுத்தினேன். ஆனால், கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே மொபலை கிடைக்கும் என வலைதளத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனவே, மீண்டும் அதே விபிஏ வழியாக மூன்று பரிவர்த்தனைகளில் ரூபாய் 5,998ஐ செலுத்தினேன். அதன் பிறகு, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. செல்போனும் என்னிடம் வரவில்லை எனக் கூறியிருந்தார்.
இப்பிரச்னையின் வீரியத்தை அறிந்த சைபர் கிரைம் போலீஸ், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இறுதியாக காஸியாபாத் பகுதியை சேர்ந்த ஜிதேந்தர் சிங்கை என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கிடைத்த தகவலின்படி, ஜிதேந்தர் சிங், பிரவீன் குமார், ரஜத் சுக்லா ஆகிய மூவரும் மலிவான விலையில் செல்போன் விற்பனை செய்வதாக அப்பாவி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
இதன்மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் www.simpleemimobile.com, www.emionline.in மற்றும் www.mobilityworld.in ஆகிய இணையத்தளம் மூலம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸிடம் சிக்காமல் இருக்க அவ்வப்போது வலைத்தளங்களின் அமைப்பு மற்றும் டொமைன் பெயரை மாற்றியும் வந்துள்ளனர். VPA மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் கண்டுபிடிப்பதும் கடினம் எனக் கணக்கிட்டுள்ளனர்.
பணத்தை பறிக்கொடுத்தவர்கள் காவல்துறையை அணுகக்கூடாது என்பதற்காக 1,999 முதல் ரூ .7,999 வரை மட்டுமே மோசடி செய்கின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 2500 நபர்களிடம் பணம் மோசடி செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரண்டு நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.