நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்திய ஊரடங்கு, பல தளர்வுகளுடன் ஐந்தாவது கட்டமாக வரும் ஜுன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், பருவத் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு டெல்லி பல்கலைக்கழகம் பருவத் தேர்வின்றி, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, 'கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, கல்லூரி திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பருவத் தேர்விற்கான கால அவகாசம், மே மாதத்துடன் முடிவடைந்ததால், பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களைத் தேர்வின்றி, அடுத்த பருவத்திற்கு தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தேர்ச்சிக்கான விதிமுறையாக மாணவர்கள், கடந்த பருவத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 விழுக்காடும், நடப்பு பருவத்தில் பெற்ற உள்மதிப்பீட்டு மதிப்பெண்களில் 50 விழுக்காடும் கருத்தில் கொண்டு தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த பருவத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஓபன் புக் முறையில் தேர்வு நடத்தப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை மாணவர்களுக்கு ஓபன் புக் முறையில் தேர்வு நடத்தப்படும் என்று, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.