ராஜஸ்தான் மாநிலம் பலியைச் சேர்ந்தவர் மனோகர். திருமணமான நிலையில், தனது மனைவி, குழந்தை ஆகியோருடன் வசித்துவருகிறார். கடந்த மார்ச் 10ஆம் தேதி, இவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். போதையில் இருந்த காரணத்தால், தனது 9 மாத குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துள்ளார். வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய மனைவி தனது குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து பதறியுள்ளார்.
இச்சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என்று மனோகர் தனது மனைவியை மிரட்டியுள்ளார். பின்னர், குழந்தையின் உடலை அருகே உள்ள நிலத்தில் புதைத்துள்ளார். கொலை குறித்து மார்ச் 11ஆம் தேதி மனோகரின் மனைவி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மனோகரை கைது செய்தனர்.