இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இலங்கையையே உலுக்கியெடுத்த இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புதான் குண்டுவெடிப்புக்கு காரணம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, குண்டுவெடிப்புக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளே காரணம் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கு மாறாகச் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களின் அமைப்புகளே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் என அதிபர் மைத்திரபால சிறிசேன தற்போது தெரிவித்துள்ளார்.
"என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நான் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை முடக்கும் நோக்குடனே சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டனர்" எனக் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்றம் வழிவகை செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேன வலியுறுத்தி வருகிறார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நான்கு பேரை தூக்கிலிட அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.