வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஒப்படைத்த ஓட்டுநர்கள் - வாகனங்களை ஒப்படைத்த
புதுச்சேரி: காரைக்காலில் சாலை வரியை ரத்து செய்யக்கோரி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஒப்படைத்தனர்.
![வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஒப்படைத்த ஓட்டுநர்கள் வாகன ஒப்படைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:31:21:1603191681-tn-ngp-03a-rental-vehicle-drivers-protest-script-7204630-20102020162955-2010f-02002-290.jpg)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கிவருகின்றன. கரோனா காலத்தில் சுற்றுலா வாகனங்கள் இயங்காமல் இருந்ததால் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி அரசு சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரி உடனடியாக கட்ட வேண்டுமென உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் காரைக்கால் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் காரைக்காலில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அந்த வகையில் இன்று (அக்டோபர் 20) காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலா வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கலியபெருமாள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து போக்குவரத்து அலுவலகம் முன்பு சுற்றுலா வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சாலை வரியை ரத்து செய்யும்வரை தங்களது போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.