டெல்லி: மத்திய அரசு சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இது விவசாயிகளுக்கு எள்ளளவும் மேன்மையை தராது என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அஹ்மத் படேல் தெரிவித்துள்ளார்.
2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு: மோடியின் இன்னொரு மாயை - அஹ்மத் படேல் சாடல்
சம்பா பயிர்களுக்கான புதிய விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதை அடுத்து, அது விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் உதவாது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஹ்மத் படேல் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், விவசாயிகள் கடந்துவரும் பிரச்னைகளுக்கு இது தீர்வாகாது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று முழங்கிய பிரதமர் மோடி, அது தொடர்பாக விவசாயிகள் கேள்வி எழுப்பும்போது காணாமல் போகிறார். நெருக்கடியான சூழலில் சுழன்றுகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு அரசு இச்சமயம் பக்கபலமாக இருக்கவேண்டும். ஆனால் அதை விடுத்து அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குறைவாகவே வகுத்துள்ளது. இது அவர்களின் பசியை கூட போக்காது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான ஊதிய விலையை உறுதிசெய்வதற்காக 2020-21ஆம் ஆண்டு காலகட்டத்திற்கான மானாவாரி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி நைஜர் விதை (100 கிலோவுக்கு ரூ. 755), எள் (100 கிலோவுக்கு ரூ. 370) , உழுத்தம் பருப்பு (ரூ. 300 / 100 கிலோவுக்கு) மற்றும் பருத்தி (100 கிலோவுக்கு ரூ. 275) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.