டெல்லி:மாநிலங்களவையில் கடந்த 20ஆம் தேதி விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மசோதாவில் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளே அதிகளவில் உள்ளதாகக் கூறி விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று துணைத் தலைவா் ஹரிவன்ஷின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, அவர் இருக்கையில் இருந்த ஆவணங்களை பறிக்க முயன்று, ஒலிப்பெருக்கியை பிடுங்க முயற்சித்த சம்பவங்களும் நிகழ்ந்தது.
இதையடுத்து, மாநிலங்களவையில் அநாகரீகமாக நடந்துகொண்ட எட்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வேளாண் மசோதாக்கள் மீதான குரல் வாக்கெடுப்பில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "குரல் வாக்குகள் கணக்கெடுக்கப்படும் சமயத்தில் உறுப்பினர்கள் அவர்களது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால், உறுப்பினர்கள் அவையின் மையத்தில் அமளியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஆதாரங்களும் அவை நிகழ்வைப் பதிவு செய்த கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னை சட்ட விரோதமாக சில உறுப்பினர்கள் சூழ்ந்திருந்தனர். காகிதங்களை கிழித்து என் மீது எறிந்தனர். என் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் பறிக்க முயன்றனர்.
நான் ஒரு அரசியலமைப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன், எனவே முறையான மறுப்பை வெளியிட முடியாது. அவையில் நடந்த இந்த உண்மைகளை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நடந்த சம்பவங்கள் குறித்து உங்கள் மனசாட்சியே தீர்மானிக்கட்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.