இது தொடர்பாக அனைத்து இணையதளங்களுக்கும் கடிதம் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சில இணையதளங்களில் தகவல் திருட்டு, அங்கீகரிக்கப்படாத தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்ததுடன், சில தளங்களில் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்த பிறகு மத்திய தொலைத்தொடர்பு துறை சார்பில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு சார்ந்த இணையதளங்கள், தங்களது தளங்களை மேம்படுத்திக் கொள்வதுடன், ஆன்லைன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளங்கள் பாதுகாப்பை தணிக்கை செய்து அறிக்கை சமர்பிக்க மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தல் அரசு சார்ந்த இணையதளங்களில் நிகழ்ந்த சைபர் தாக்குதல்கள் குறித்து இதுவரை எந்தவொரு அறிக்கையும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஐசிஇஆர் (இந்திய கணினி அவசரகால பொறுப்பு குழு) குழுவுக்கு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய - சீன படையினருக்கு இடையே மோதல் நிகழ்ந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தற்போது சைபர் தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அனைத்து இணையதளங்களும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தணிக்கை செய்து, அறிக்கை சமர்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2019 அக்டோபர் மாதம் இதேபோல் அனைத்து இணையதளங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 8 மாதம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்கு ரகசிய தகவல் வழங்கிய நபரை தூக்கிலிட்ட ஈரான்!