கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை ஆட்டம் காண செய்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பலர் வேலையில்லாமலும், வெளியே செல்ல முடியாமலும் தவித்துவருகின்றனர்.
இதனிடையே, கேரம் போர்டு, சதுரங்கம், போக்கர் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளையும், பேட்மிண்டன் போன்ற வெளியரங்க விளையாட்டுகளையும் வீட்டிலிருக்கும் குழந்தைகள், வயது வந்தோர் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டுகளை விளையாடும்போது கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எந்த விதமான விளையாட்டுகளையும் விளையாட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சூர்யபேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் கேரம்போர்டு விளையாடிய 31 பேருக்கு கரோனாவைப் பரப்பியுள்ளார். இதேபோல், கரோனா பாதிப்புடைய லாரி ஓட்டுநர் போக்கர் விளையாடியபோது, அவரிடமிருந்து பலருக்கு வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நான்கு பேருக்கு மேல் விளையாடும் அனைத்து விளையாட்டுகளுக்கும் காவல்துறை தடைவிதித்துள்ளது. போர்டு, கேரம் காயின்கள், போக்கர் கார்டுகள் ஆகியவற்றை கரோனா பாதிப்புடையவர்கள் தொட்டால், விளையாட்டை விளையாடும் மற்றவர்களுக்கு வைரஸ் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெளியரங்கு விளையாட்டை விளையாடுபவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து விளையாட்டுகளை விளையாடலாம். ஆனால், அண்டை வீட்டாருடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். குடியிருப்பு வளாகம், அடுக்குமாடி இல்லங்களின் சங்க தலைவர்களுக்குக் கூட்டம் கூடுவதால் ஏற்படும் அபாயங்களை காவல்துறையினர் விளக்கிவருகின்றனர்.
இதுகுறித்து ரச்சகொண்டா ஆய்வாளர் கூறுகையில், "இம்மாதிரியான குழு விளையாட்டுகளும் வெளியரங்கு விளையாட்டுகளும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த செயல்கள் வைரஸ் பரவலை அதிகரிக்கும். பலர் நோயால் பாதிப்படைவர். தகுந்த இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா வைரசால் இதயம், மூளை, சிறுநீரகமும் பாதிக்கும்!