மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. சிவசேனா 56 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளுடன் மூன்றாவாது இடத்திலும் உள்ளன. 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இவர்கள் தவிர ராஜ் தாக்கரே கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஒரு தொகுதியில் வென்றது.
யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 50-50 அதிகாரப் பகிர்வு அளித்தால் மட்டுமே பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியிருந்தார்.
அவரின் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கார்ட்டூன் (கேலிச் சித்திரம்) ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், கழுத்தில் கடிகாரம் (தேசியவாத காங்கிரஸ் சின்னம்) அணிந்த புலி (சிவசேனா சின்னம்) தாமரையை (பாரதிய ஜனதா சின்னம்) பறிப்பது போன்று காணப்பட்டது.