இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக குடிபெயர்ந்தோர் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்தது. அதன்பின் மே முதல் வாரம், அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.
அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் வெளிமாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் தொழிலாளர்களை அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும் சிலர் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் அரசு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடுசெய்து கொடுத்திருப்பதால் குடிபெயர்ந்தோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்துசெல்ல வேண்டாம் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
குடிபெயர்ந்தோரை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.