உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் இரண்டு சாதுக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிவ சேனா கட்சி கண்டித்துள்ளது. மேலும், அந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரியுள்ளது.
சிவ சேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'உத்தரப்பிரதேசத்தில் சாதுக்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சில ஊடகங்கள், கீ போர்ட் போராளிகள் இந்த விஷயத்தை வகுப்புவாதமாக மாற்ற முயற்சிக்காதீர்கள்' எனத் தெரிவித்திருந்தார்.
சிவ சேனா கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத், புலந்த்ஷஹரில் இரண்டு சாதுக்கள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. பால்கர் சாதுக்கள் கொலையை வகுப்புவாத கலவரமாக மாற்ற முயற்சித்ததைப் போல், இந்த விஷயத்தையும் வகுப்புவாத கலவரமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.