காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இன்று 50ஆவது பிறந்தநாளாகும். இந்நிலையில், கரோனா சூழல் காரணமாகவும் எல்லையில் ராணுவ வீரர்கள் உயிர் நீத்ததன் காரணமாகவும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்' - ராகுல் காந்தி - ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என காங்கிரஸ் வேண்டுகோள்
எல்லையில் ராணுவ வீரர் வீரமரணமடைந்ததன் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”தற்போதைய சூழலில் கரோனா வைரஸ் காரணமாகவும், ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததற்காகவும் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை.
மேலும் அவருக்காக கேக் வெட்டுவது, கோஷங்கள் எழுப்புவது, பேனர் வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு கொண்டாட்டங்களையும் நடத்தக் கூடாது என்பதை அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் உறுதிசெய்ய வேண்டும். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி உதவ வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.