கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும், உள்ளூர் விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் விமான சேவைகள் வரும் மே 18 ஆம் தேதி முதல் தொடங்கப்போவதாக ஈடிவி பாரத் ஊடகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறுகையில், "டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை டி.ஜி.சி.ஏ (DGCA officials), சி.ஐ.எஸ்.எஃப் (CISF), ஏ.ஏ.ஐ (AAI), டிஐஏல் (DIAL officers) அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் உள்ளூர் விமான சேவைகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் மத்திய அரசிடம் கலந்தாலோசித்தப் பிறகே இறுதி தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றனர்.