நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆறு கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஏழாம், இறுதிகட்ட வாக்குப்பதிவு ஏழு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
வாரணாசி 'கை' கூடுமா?
இன்றைய தேர்தலில் பல முக்கியத் தலைவர்களின் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பாக பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியும் அடங்கும். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அங்கு பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்தார். பின்னர் அவர் பிரதமராகவும் பதவியேற்றார்.
எனவே இந்த வருடமும் மோடி இதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அஜய் ராய் சொற்ப வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.