புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் வட்ட ஆய்வாளர் சண்முகசுந்தரத்தின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சையளிக்கவில்லை எனக் கூறி சண்முகசுந்தரமும் அவரது உறவினர்களும் மருத்துவமனை ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் மீதான காவல் ஆய்வாளரின் அராஜகத்தை கண்டித்தும், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் உடனடியாக கைது செய்து வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ஆனாலும், சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மருத்துவமனை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.