உலக நாடுகளை கரோனா பெருந்தொற்றானது அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் ஆதிக்கத்தால் வல்லரசு நாடுகள்கூட செய்வதறியாது திணறிவரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதில் 5 பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
சமீபத்தில், தூத்துக்குடி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 7 பேரும், திருநெல்வேலியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் என மொத்தம் 10 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர். இதையடுத்து தூத்துக்குடியில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் மொத்தம் 14 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இவர்களில் ஆத்தூர், பேட்மாநகரம், போல்டன்புரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 5 பெண்கள், 2 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 9 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தபோது அவர்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதாகத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.