கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிவருகின்றன. இதற்கிடையில் வைரஸ் பரவியதற்கு வௌவால்கள்தான் காரணம் என, மக்கள் அதன் மீது குற்றம் சுமத்துகின்றனர். இதுதொடர்பாக ஈகாஹெல்த் மற்றும் நோயியல் சூழியல் மருந்துவர் ஜோனதான் எப்ஸ்டெயின் கூறுகையில், “வெளவால்கள் மனிதர்களுக்குப் பரப்பவில்லை, அவைகளால் பரப்பவும் முடியாது” என்கிறார்.
இதேபோல், “வௌவால்கள்தான் கோவிட்-19 நோயைப் பரப்பியதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்” என்று தெளிவுப்படுத்துகிறார் ஹைதராபாத் உயிரியலாளர் சி.ஸ்ரீனிவாசலு.
கோவிட்-19 பெருந்தொற்று இரவு நேர பாலூட்டிகளான வௌவால்கள் மூலம் மக்களிடையே பரவியதாகச் சந்தேகம் வலுத்துவருகிறது. இதற்கு முன்னர் உலகத்தைத் தாக்கிய எபோலா, சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வௌவால்கள் வழியாகப் பரவியதாகச் சொல்லப்பட்டது.
ஒவ்வோரு வௌவால்களும் அவற்றின் உடலில் குறைந்தது இரு வகையான வைரஸ்களைக் கொண்டுள்ளன. சில சமயங்களில், இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வௌவால்களுடன் நேரடி தொடர்புடைய பிற விலங்கினங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது.
இந்த இரு வழிகளில், ஏதேனும் ஒன்றின் மூலம் கரோனா தொற்று மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வௌவால்கள் உடலில் இந்த தொற்றுகள் உள்ளதா? வைரஸ்களைப் பரப்புவதில் வௌவால்களின் பங்கு எந்தளவு? இதனால் மனிதர்களுக்கு ஏதாவது லாபம் உண்டா? இப்படிப் பல கேள்விகள் மக்களிடையே சந்தேகங்களைக் கிளப்புகிறது.
இதுவரை, உலகில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்றுகள் பெரும்பாலும் விலங்குகளிடையே உருவானவை. விலங்குகளிடமிருந்து இருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த நோய்கள் 'ஜூனோடிக் நோய்கள்'(zoonotic diseases) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஜூனோடிக் வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஆற்றல் கொண்டவை.
வௌவால்கள் கிட்டத்தட்ட 60 வகையான வைரஸ்களை தங்களிடம் கொண்டுள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதர்களுக்கு ஏற்படும் காயங்கள் நமது செல்களைப் பாதிக்கலாம். அப்போது, நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அவற்றைச் சரி செய்யப் போராடுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில், நமது தசைகளில் வலி ஏற்படலாம். சில சமயம் காய்ச்சலும் ஏற்படும். நம் உடலில் செல்களில் ஏற்படும் இப்பிரச்னைகளை நமது உடலே சரிசெய்து கொள்கிறது. இதுபோன்ற காலங்களில், நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி, திறம்படச் செயல்பட முடியாமல் போனால் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்படுகிறது.
கோவிட்-19 விஷயத்திலும் இதுதான் நடைபெறுகிறது. இதில் வௌவால்கள் தனித்துவமானது. அவைப் பறக்க நிமிடத்துக்கு 100க்கும் மேற்பட்ட முறை தங்கள் இறக்கைகளை அடிக்கின்றன. இதனால் , அவற்றின் தசைகள் எளிதாகச் சேதமடையும். இருப்பினும், வௌவால்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு இதை எளிதாகக் குணப்படுத்திவிடுகிறது.
வௌவால்களின் நோய் எதிர்ப்புச் சக்தி எப்போதாவதுதான் செயல்பட முடியாமல் போகிறது. சில வௌவால்களில் அவற்றின் உடல்களிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி எப்போதும் வைரஸ்களுடன் போராடத் தயாராகவே இருக்கின்றன. குறைந்தப்பட்சம் வைரசால் வௌவால்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல், இந்த நோய் எதிர்ப்புச் சக்திகள் பாதுகாக்கின்றன.
இதுதான் வௌவால்கள் வைரஸ்களைப் பரப்பும் இடமாக்குகின்றன. அதாவது, இந்த வைரஸ்களால் வௌவாலுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதே வேளையில், இந்த வைரஸ்கள் வேறு உயிரினங்களுக்குப் பரவும்வரை வௌவால்கள் உடல்களிலேயே தங்கியிருக்கின்றன.
வௌவால்களால் குறைந்த நேரத்தில் அதிக தொலைவு பறக்க முடியும். பறக்கும்போது வௌவால்கள் வெளியிடும் எச்சம், சிறுநீர் வழியாக மற்ற பறவைகள், விலங்குகளுக்கு இந்த வைரசைப் பரப்ப முடியும். வௌவால்களை தொட்டாலோ அல்லது உட்கொண்டாலோ எளிதாக வைரஸ் தொற்று பரவிவிடும்.
அதனால், வௌவால்களை தொடாமலோ அல்லது உட்கொள்ளாமலோ மனிதர்களுக்கு, இந்நோய் பரவ வாய்ப்பில்லை. எனவே, வௌவால்கள் தானாக, இந்த வைரசை மனிதர்களுக்குப் பரப்பவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த 2002ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் வௌவால்களிடமிருந்து புனுகுப் பூனைக்குப் பரவியது. சீனாவின் அசைவ சந்தைகளில் மயில், வௌவால்கள், மான்கள், அணில்கள் உள்ளிட்ட 120 வகையான விலங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.