இதுதொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசாங்க அலுவலகங்களுக்கு மட்டுமே நிர்வாக பணிகளை மேற்பார்வையிடவும், கூட்டத்தை கூட்டி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதிகாரம் உள்ளது என்று மார்ச் 11, 2016 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் போன்ற அரசு சாரா உறுப்பினர்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படுவதில்லை. எனவே, அத்தகைய உத்தியோகபூர்வமற்ற உறுப்பினர்கள் / நாடாளுமன்ற உறுப்பினர்கள் / சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் அரசாங்க அலுவலர்கள் கலந்து கொள்ள கூடாது.
பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து தீர்வு காணும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் நிர்ணயிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் / சட்டப்பேரவை உறுப்பினரும் இந்த கூட்டத்திற்கு கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட வேண்டும். பல்வேறு அமைச்சகங்களின் அனைத்து துறைகளும் இந்த வழிமுறைகளை அவற்றின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகள் / அலுவலகங்களின் கவனத்திற்கு கொண்டு வரவும், சுற்றறிக்கைகளில் உள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பிரவீன் தரேகர்‘, இது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியலமைப்பு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசாங்கம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர்களாக தானும், மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸும் மாநிலத்தின் பல்வேறு இடங்களையும், இங்குள்ள கரோனா சிகிச்சை மையங்களின் சூழ்நிலையைப் பார்வையிட்டோம் என்றும், மாநில அரசு கூறுவதுபோல, அரசு ஊழியர்களுக்கு எந்த உத்தரவுகளையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.