குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் உள்ள ஜேஎன்யூ, ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இதன் உச்சக்கட்டமாக வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று விவாதம் நடத்தப்பட்டது. இதில், திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "வன்முறையை தடுக்க காவல் துறையினர் முயற்சிக்காமல் கையை கட்டி வேடிக்கை பார்த்தனர். ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியது சிசிடிவி பதிவுகளில் பதிவாகியது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியே ஜேஎன்யூ தாக்குதலுக்கு காரணம். முகமூடி அணிந்த ஏபிவிபி ஆதரவாளர்கள் ஜேஎன்யூ வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்" என்றார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் இணைய சேவை முடக்கம்: பயங்கரவாதம் பின்தங்கியதா?