நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், மக்கள் விரும்பாமல் புறக்கணிக்கின்ற திட்டங்களை சாதனைகள் என்று புகழப்பட்டுள்ளது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டம் மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையோடு தொடங்கியது. அந்த உரையில் அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது, காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கியது உள்ளிட்டவற்றை புகழ்ந்து பேசினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியதன் மூலம் காந்தியடிகளின் கனவு நிறைவேறியது என்று குடியரசுத் தலைவர் கூறியதை ஏற்க முடியாது. காந்தியடிகள் மதத்தின் அடிப்படையில் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றவோ, அனுமதிக்கவோ ஒருபோதும் கூறவில்லை. ஆனால், தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் எதிராக அமைந்துள்ளது.