தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தத் தேர்தல் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடக்கிறது. அதற்கு மாறாக 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதில், '' தொகுதி வரையறையிலும் குளறுபடிகள் உள்ளன. இதுவும் தீர்க்கப்பட வேண்டும். பெண்கள், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடும் 1991ஆம் ஆண்டு முறைப்படியே நடக்க வேண்டும் '' என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை மறுதினம் (புதன்கிழமை) தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. திமுக சார்பில் வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது திமுக தரப்பில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், வழக்குரைஞர் கபில் சிபல் மற்றும் அசோக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.