தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓபிசி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்! - உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

டெல்லி: மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய மூன்று மாத காலத்திற்குள் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : Jul 28, 2020, 4:49 PM IST

இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசு கல்லூரிகளில் அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இது குறித்த வழக்கில் அனைத்து தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே, மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய மூன்று மாத காலத்திற்குள் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வலியுறுத்தும் நோக்கில் திமுக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அகில இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ள காரணத்தால் திமுக கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறுகையில், "ஓபிசி விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தங்களது கருத்தை கேட்காமல், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்ற நோக்கில் கட்சியின் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

ஓபிசி விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என திமுக, பாமக ஆகிய கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. பாஜகவை தவிர தென் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் குழுவை அமைக்க ஆதரவாக உள்ளன.

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மத்திய அரசு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: அறிமுகமான எஸ்பிஐ கிரெடிட் கார்ட்... பல சலுகைகளை அள்ள தயாராகும் ரயில் பயனர்கள்!

ABOUT THE AUTHOR

...view details