பிகார் தரபங்கா மாவட்டம் கெவதி தொகுதிக்குட்பட்ட ரன்வே கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான சந்திரமணி. இவர் எலும்பு மஜ்ஜை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்திரமணி, வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது சோதனை அறிக்கை வந்ததும், அவரை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் பிகார் திரும்பினார். இந்நிலையில் சந்திரமணியை மருத்துவர்கள் மீண்டும் எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அழைத்தனர்.
இதற்கிடையில் நாடு முழுக்க 21 நாள்கள் பூட்டுதல் அமலானது. இதனால் அவர்களால் தமிழ்நாட்டுக்கு வரமுடியவில்லை. இதையடுத்து தங்களின் நிலை குறித்து பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு சந்திரமணி தெரிவித்தார். இது குறித்து தரபங்கா மாவட்ட ஆட்சியர் தியாகராஜனுக்கு தெரியவர உடனடியாக உதவி செய்தார்.
தமிழ்நாடு செல்ல அனுமதி சீட்டு கிடைக்க ஏற்பாடு செய்தார். சந்திரமணி மற்றும் அவருடன் செல்லும் நபர்கள், சிகிச்சைக்குச் செல்லும் நபர்கள் என அனைவருக்கும் பிகாரில் கோவிட்-19 பரிசோதனை நடத்தப்படும். அதேபோல் திரும்பி வரும் போதும் வைரஸ் பரிசோதனை நடத்தப்படும். பிகார் வந்தவுடன் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக, தரபங்கா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.