கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள படகு இல்லம் கோவிட்-19 வைரஸ் தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றப்பட உள்ளது.
இது குறித்து ஆலப்புழா மாவட்டத்தில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன், “படகு இல்ல உரிமையாளர்கள் இந்த முன்மொழிவுக்கு சாதகமாக பதிலளித்துள்ளனர். பொதுப்பணித் துறையுடன் ஒத்துழைத்து, மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இரண்டாயிரம் படகுகளில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளை தயார் செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்பும் ஆலப்புழா பூர்வீகவாசிகள் அத்தகைய ஹவுஸ் படகு தனிமைப்படுத்தும் பிரிவுகளில் தங்க வைக்கப்படுவார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்க அவர்கள் சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு ஹவுஸ் படகுகளில் கடுமையான தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். விமான நிலையங்கள் உள்ள மாவட்டங்களில் இதேபோன்ற வசதிகளைப் பின்பற்றுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது” என்றார்.
கேரளத்தில், கரோனா சிகிச்சை மையமாக மாறும் படகுகள்! கேரளாவில் 239 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. இதில் 123 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு 2 ஆக உள்ளது. நாடு முழுக்க கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாயிரத்து 529 ஆக உள்ளது. இறப்பு 242. உலகம் முழுக்க இந்த பெருந்தொற்றுக்கு 17 லட்சத்து 12 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.