சமூக வலைதளம் முழுவதும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். இண்டிகோ விமானத்தில், மூத்தப் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் அவர் நடத்திய உரையாடல்தான் அதற்குக் காரணம்.
மும்பையிலிருந்து லக்னோவுக்குச் செல்லும் விமானத்தில் அர்னாப்பும் குணாலும் பயணம் செய்துள்ளனர். அப்போது அர்னாபிடம் சில கேள்விகளை முன்வைத்த குணால், அவர் கண்டுகொள்ளாததால் அர்னாபை கோழையா என்று வினவினார். மேலும், இந்த நிகழ்வுகளை தனது போனில் படம்பிடித்து, அதை ட்விட்டரில் பதிவிட்டார்.
குணாலின் இச்செயலைக் கண்டித்து, இண்டிகோ விமான நிறுவனம், ஆறு மாதத்திற்குத் தங்களது விமானத்தில் பறக்கத் தடையும் விதித்தது. இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்களும் குணால் பறக்கத் தடைவிதித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார்.
இந்தச் சூழலில் குணால் கம்ரா பயணித்த இண்டிகோ விமானத்தின் கேப்டன் இவ்விவகாரம் குறித்து இண்டிகோ நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், விரும்பத்தகாதச் செயலை குணால் செய்திருந்த போதிலும், அவர் விதிகளை மீறி எதுவும் செய்யவில்லை என்றும் தன்னிடம் விளக்கம் கேட்காமல், சமூக வலைதள பக்கத்தில் குணால் இட்ட பதிவுகளின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுத்தது தனக்கு வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தான் விமானத்தின் கேப்டனாகி ஒன்பது வருடங்களில் எடுக்காத நடவடிக்கையை இண்டிகோ நிறுவனம் எடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்விவகாரம் தெளிவற்றத் தன்மைக்கு இட்டுச் செல்லும் என்பதால் இது குறித்து தெளிவுபடுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பதிலளித்த இண்டிகோ நிர்வாகம், சம்பந்தப்பட்ட கேப்டனிடம் அறிக்கையைப் பெற்றுள்ளதாகவும், இது குறித்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: அர்னாபை விமானத்தில் துளைத்தெடுத்த பிரபல காமெடியனுக்கு ஸ்பைஸ் ஜெட் தடை!