குஜராத் மாநிலம் மாதாபரில் (Madhapar) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவர்களின் அதீத கவனிப்பால், அக்குடும்பத்தை சேர்ந்த பெண் அவரது மாமியார் இருவரும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பெண்ணின் மாமனார் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குணமடைந்த பெண் தன்னை கவனித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்," எனது தாயார் வீட்டிற்கு வந்துவிட்டார், எனது தந்தையும் சிக்கிரம் குணமாகி வீட்டிற்கு வரவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தெரிவது, தனது மாமனார் இறந்துவிட்டார் என்பதை அறியாத அப்பெண்ணின் நன்றி கடிதம் மருத்துவர்களை சோகமடைய வைத்தது. இக்கடிதத்தை மாவட்ட சுகாதார துறையினர் மக்களின் பார்வைக்காக வெளியிட்டனர். தற்போது, அவர் உணர்ச்சி பூர்வமாக ஏழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த கடிதத்தில், "எங்களுக்கு ஆதரவளித்து, நல்ல அக்கறை செலுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி. எங்கள் வீட்டில் கூட இவ்வளவு கவனிப்பைப் பெற முடியாது. மனநல மருத்துவர் கரிஷ்மா மேடம் எங்களுக்கு தைரியம் அளித்து மன உறுதியை உயர்த்தினார். அவரின் செயல் எங்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவியது. எல்லோரும் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்".
மேலும், அனைத்து ஊழியர்களும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் அனைவரும் அழகாக பேசினார்கள். எங்களை அழ வேண்டாம் என சொல்வது மட்டுமின்றி இரண்டு நாள்களில் நீங்கள் வீட்டிற்கு செல்வதை நாங்கள் பார்க்கபோகிறோம் என நம்பிக்கையாக கூறினர். தற்போது, அது உண்மை ஆகியுள்ளது. உங்கள் ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி. எனக்கு நல்ல உணவு, ஷர்பத், காலை உணவு, பழங்கள் கிடைப்பதை உணவியல் நிபுணர் உறுதி செய்தார். நீங்கள் அனைவரும் எங்களுக்கு செய்த நன்மைகளை நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாது. அனைவருக்கும் மிக்க நன்றி. தயவுசெய்து எனது பாப்பாஜியை விரைவில் வீட்டிற்கு அனுப்புங்கள். நான் யாரையும் குறிப்பிட தவறியிருந்தால் மன்னித்து விடுங்கள். அனைவருக்கும் மீண்டும் நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:ஒரே மருத்துவமனையில் 33 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா