‘சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று மகாபாரதத்தில் விதுரர் கூறுகிறார். அவர் நயவஞ்சகர்களுக்கு எதிராக த்ரிதராஷ்டிர மன்னருக்கு இதை அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அவர் போலித்தனம் மற்றும் பல தவறான கட்டுக்கதைகள் வேரூன்றியுள்ள இந்தியாவின் கல்வி நிறுவனங்களை இதில் எளிதாகக் குறிப்பிட்டிருக்கலாம்.
கோவிட்-19 தொற்றுக்கு பிந்தைய உலகில் இந்தப் போலித்தனத்திற்குச் சவால் ஏற்பட்டுள்ளது. அதில் திறமையான, வேகமான மற்றும் புதுமையானவர்கள் மட்டுமே பிழைத்திருப்பார்கள். கல்வி என்பது பொதுநலனுடன் சேவைசெய்ய அரசால் மட்டுமே வழங்கப்பட வேண்டும், என்பது நமது கட்டுக்கதைகளில் ஒன்று. முதலாவதாக இந்தப் போலித்தனமான பொய், லாபம் ஈட்டுவதைத் தடைசெய்கிறது.
ஆனால், பலரும் அறிந்தபடி உண்மையில் கல்வித்துறையில் பலரும் லாபம் ஈட்டுகிறார்கள்; இரண்டாவது, தனியார் பள்ளிகள் நடத்த லைசென்ஸ் ராஜ்ஜில் இருந்த நடைமுறைகளைத் தனியார் பள்ளிகள் அறிந்தே இருப்பார்கள்.
முன்னேறிய நாடுகளில் கல்வி என்பது அரசு மட்டுமே வழங்குகிறது என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டது. உண்மை என்னவென்றால், அமெரிக்கா, இங்கிலாந்து, சோசலிச ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபத்திய கல்விச் சீர்திருத்தங்கள் அனைத்தும் தனியார் கல்வி முயற்சியை ஊக்குவித்துள்ளன. வளர்ந்த நாடுகளிலுள்ள பல பள்ளிகள் தனியாரால் நடத்தப்பட்டடு/பொது நிதியளிக்கப்படும் மாதிரியை நோக்கி நகர்கின்றன.
இந்தக் கட்டுக்கதையைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் இந்தியா பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. ஆனால் விளைவுகளோ பரிதாபமானது. 74 நாடுகளில் நடத்தப்பட்ட சர்வதேச பிசா (PISA) சோதனையில் இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானுக்கு முன்னால், 73ஆவது இடத்தைப் பிடித்தனர். ஐந்தாம் வகுப்பில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடிந்தது; ஐந்தாம் வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கூட்டல் கணக்குகளைக்கூட செய்ய முடியவில்லை.
சில மாநிலங்களில், பத்து விழுக்காட்டிற்கும் குறைவான ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் (TET) தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில், நான்கு ஆசிரியர்களில் மூன்று பேருக்கு ஐந்தாம் வகுப்பு பாடத்திலுள்ள கணக்கைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. சராசரியான அரசுப் பள்ளியில், நான்கு ஆசிரியர்கள் சட்டவிரோத விடுப்பில் இருப்பதாகவும் இருவரில் ஒருவர் மாணவர்களுக்கு பாடங்களை முறையாகக் கற்பிப்பதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 2010-11 முதல் 2017-18 வரை 2.4 கோடி குழந்தைகள் அரசுப் பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டதாக அரசின் DISE தரவுகள் தெரிவிக்கிறது. இன்று இந்தியாவின் 47 விழுக்காடு குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். அதாவது, இந்தியாவில் தனியார் பள்ளி முறையில் 12 கோடி குழந்தைகள் படிக்கிறார்கள். உலகளவில் மூன்றாவது இடத்தில் நாம் இருக்கிறோம்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 70 விழுக்காடு பெற்றோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவும், 45 விழுக்காடு பெற்றோர்கள் 500 ரூபாய்க்கு குறைவாகவும் பள்ளிக்குக் கட்டணம் செலுத்துகின்றனர். இது தனியார் பள்ளிகள் பணக்கார மக்களுக்கு மட்டுமே என்ற மற்றொரு கட்டுக்கதையை தகர்க்கிறது.
அரசுப் பள்ளிகள் எந்த வேகத்தில் காலியாகின்றன என்பதன் அடிப்படையில், நமக்கு கூடுதலாக 1,30,000 தனியார் பள்ளிகள் தேவைப்படுகின்றன. தங்கள் குழந்தையை ஒரு ஒழுக்கமான பள்ளியில் சேர்க்க காத்திருக்கும் பெற்றோரின் நீண்ட வரிசைகளைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. நல்ல தனியார் பள்ளிகளின் பற்றாக்குறைக்கு மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம் - உரிமம் பெறுதல்:
ஒரு நேர்மையான நபர் பள்ளி தொடங்குவது என்பது மிகவும் கடினம். அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து ஒரு பள்ளியை ஆரம்பிக்க 35 முதல் 125 அனுமதிகள் தேவைப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு அனுமதிக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
அதிலும் (அந்த இடத்தில் ஒரு பள்ளி அவசியம் என்பதை நிரூபிக்க) அத்தியாவசிய சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு மிகவும் அதிகமான லஞ்சம் கொடுக்க வேண்டும். மேலும், இந்த மொத்த செயல்முறையும் முடிய ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம்.