கரோனா வைரஸ் நெருக்கடி, பொது முடக்கம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்திய இரண்டாவது நாள் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் அசோக் கெலாட் தனது கருத்துகளை கூறியுள்ளார்.
முன்னதாக அசோக் கெலாட் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது. தொழில்துறை உற்பத்தி திறன் வெகுவாக குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தேவையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இதற்காக, தேவைப்படும் குடும்பங்களுக்கு நேரடி நிதி அளிக்க வேண்டும். இது அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மந்தநிலையால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழிலாளர்களின் ஊதியம் வழங்குவதற்கான நிதி உதவியை வழங்கும்.
மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 53 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பை மேலும் 100 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
இதனால் 70 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. கரோனா வைரஸை எதிர்கொள்ள மாநில அரசுக்கு ஒரு லட்சம் கோடி வழங்க வேண்டும். இந்த ஆண்டு 29 மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் 90 ஆயிரம் ஹெக்டேர் விவசாயப் பகுதி வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நடப்பு மற்றும் அடுத்த மாதங்களில் ஈரான், ஆப்பிரிக்காவிலிருந்து வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆகவே இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூன்17) பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்ஸிங் மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது, “கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை உறுதிசெய்யும் பொருட்டு மருத்துவ வளங்களுக்காக மாநிலங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஆதரவை வழங்க வேண்டும்” எனபதை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் பிரதமருடனான காணொலி சந்திப்பு தமக்கு திருப்தியளிக்கவில்லை என ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கோவிட்-19 ஐ கையாள்வதற்கான சிறந்த நடைமுறைகளை அனைத்து மாநிலங்களும் தற்போது அறிந்திருக்கின்றன. இருப்பினும் இன்றைய சந்திப்பின்போது கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வது தொடர்பாக மத்திய- மாநில அரசுகளின் சவால்கள் மற்றும் வரம்புகள் பற்றி விவாதிக்கப்படவில்லை என்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தேன்” என கூறியுள்ளார்.
மாநில முதலமைச்சர்களுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் திங்கள்கிழமை நள்ளிரவில் சீன ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்கு நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினரான இந்தியா!